Twitter Twitter Delicious Facebook Digg Stumbleupon


முஹர்ரம் பிறை 11ல் நோன்பு இல்லை 0

ஸலாம்.

நம்மூர் முஸ்லிம்களிடம் அமல்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் "நகர ஜமாஅத்துல் உலமா பேரவை" மனாருல் ஹுதா மாத இதழிலிருந்து "அல்லாஹ்வின் மாதம்" என்றத் தலைப்பில் ஒரு பிரசுரம் வெளியிட்டுள்ளார்கள்.

முஹர்ரம் மாதத்தின் சிறப்புகள் அந்த நோட்டிஸில் விளக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் வைக்க வேண்டிய ஆஷுரா நோன்பு குறித்த விளக்கமும் இடம் பெற்றுள்ளது.

அவர்களுக்கும் நமக்கும் மார்க்க ரீதியாக கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவர்களின் நற்பணிகளுக்கு இறைவன் நற்கூலி வழங்க நாம் பிரார்த்திக்கிறோம்.
அதே நேரம் மார்க்க பெயரில் வெளியிடப்படும் தகவல்களில் தவறுகள் இருந்தால் அதை நாம் சுட்டிக் காட்டியும் வருகிறோம்.

இப்போது வெளியிடப்பட்டுள்ள நோட்டிஸில் முஹர்ரம் மாதம் பிறை 9-10 ஆகிய இரண்டு நாட்கள் நோன்பு வைப்பது பற்றிய அறிவிப்பும் அதற்கான தெளிவான ஆதாரமும் கொடுக்கப்பட்டுள்ளது. தொடரும் விளக்கத்தில் 9-10ல் நோன்பு வைக்கலாம் அல்லது 10-11ல் நோன்பு வைக்கலாம் என்ற கருத்தை வெளியிட்டு பிறை 11 லும் நோன்பு வைக்க ஆதாரமாக அஹ்மதிலிருந்து ஒரு ஹதீஸை அந்த மாத இதழ் பதிவு செய்ததை வெளியிட்டுள்ளார்கள்.

யூதர்களை நாம் பின்தொடரக் கூடாது என்பதற்காகவே நபி(ஸல்) அவர்கள் யூதர்கள் நோன்பு வைப்பதற்கு முந்தைய தினமான பிறை 9ல் நோன்பு வைக்க ஆவல் கொண்டார்கள். அது சுன்னத்தாகவும் ஆக்கப்பட்டுள்ளது. பிறை 11ல் நோன்பு வைக்கலாம் என்றால் பிறை 10ல் நோன்பு வைக்கும் யூதர்களைத் பின் தொடர்ந்து அடுத்த நாள் நோன்பு வைத்தது போன்றாகி விடும். அமல்களில் வேதக்காரர்களான யூத - கிறிஸ்தவர்களுக்கு முந்தி முஸ்லிம்கள் செல்ல வேண்டும் என்பதே இஸ்லாமிய நிலைப்பாடு.

முஸ்லிம்களுக்கு வெள்ளிக்கிழமைத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான புகாரி - முஸ்லிம் நூல்களின் அறிவிப்புகளை படித்து சிந்திப்பவர்களுக்கு இது விளங்கும். எனவே பிறை 11ல் நோன்பு வைத்து யூதர்களை பின்தொடரும் நிலையை நபி(ஸல்) ஏற்படுத்தி இருக்க மாட்டார்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இரண்டாவதாக,
பிறை 10ல் நபி(ஸல்) நோன்பு வைத்துள்ளார்கள். இது யூதர்கள் கொண்டாடும் தினமாயிற்றே.... என்று சுட்டிக்காட்டப்பட்டவுடன் அடுத்த வருடம் இறைவன் நாடி உயிருடன் இருந்தால் பிறை 9ல் நோன்பு வைப்பேன் என்று நபி(ஸல்) கூறுகிறார்கள். இங்கு முக்கியமாக நாம் சிந்திக்க வேண்டிய கேள்வி என்னவென்றால் பிறை 10ல் நோன்பு வைத்த நபி(ஸல்) அதற்கு அடுத்த நாளான பிறை 11ல் நோன்பு வைக்க என்ன தடை இருந்தது?! அடுத்த வருட பிறை 9 வரை காத்திராமல் பிறை 11ல் நோன்பு வைத்து காட்டி இருக்கலாமே.... அப்படி எந்த அறிவிப்பும் இல்லையே... எனவே பிறை 11ல் நோன்பு வைப்பது சுன்னத்தாகாது என்பதை விளங்கலாம்.

"எங்களுக்கு இந்த விளக்கமெல்லாம் தேவையில்லை, பிறை 11ல் நோன்பு வைக்க ஹதீஸ் வந்துள்ளது என்று உலமாக்கள் வாதிக்க முற்பட்டால் அப்போதும் அந்த வாதம் பலவீனப்பட்டுப் போகும். ஏனெனில் அஹ்மதில் இருப்பதாக அவர்கள் வெளியிட்ட செய்தி (இது இன்னும் ஓரிரு நூட்களிலும் வருகின்றது) ஆதாரப்பூர்வமான செய்தியல்ல. கருத்து வேறுபாடுமிக்க பலவீனமான செய்தியாகும்.

இதில் முஹம்மத் இப்னு அப்துர்ரஹ்மான் என்பவர் இடம் பெற்றிருக்கின்றார், இவர் கடுமையான மனனக் குறையுள்ளவரும் இவர்பற்றி அஹ்மத் இப்ன் ஹன்பல் மற்றும் யஹ்யா இப்னு மஈன் (ரஹ்) அவர்களும் இவரை பலவீனர் எனக் குறிப்பிட்டிருக்கின்றார்கள், இன்னும் தாவூத் இப்னு அலி என்பவரும் இந்த அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறுகின்றார் அவரை இமாம் தஹபி (ரஹ்) அவர்கள் இவருடைய ஹதீதை ஆதாரமாக எடுத்துக் கொள்ளக்கூடாது எனக்கூறுகின்றார்கள்.

யூதர்களுக்கு மாறு செய்வதென்றால் 9ம் பிறையில் நோன்பு வைப்பது போதும் என்று ஷாபிஈ உட்பட பலர் கூறுகிறார்கள்.

وروي عن ابن عباس أنه قال : صوموا التاسع والعاشر وخالفوا اليهود ، وإليه ذهب الشافعي وبعضهم إلى أن المستحب صوم التاسع فقط

எனவே பிறை 11ல் நோன்பு வைப்பது சுன்னதல்ல என்பதை எடுத்துரைக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு.

குர்ஆனும் - குர்ஆனுக்கு விளக்க உரையாக உள்ள ஹதீஸ்களும் மட்டுமே இஸ்லாம் என்ற நிலைக்கு உலமாக்கள் வந்தால் நாம் அனைவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் (அல்லாஹ் நாட்வேண்டும்)


0 Responses So Far:

 
Rozor-V3 Copyright © 2011 Razor Theme V3 is Designed by Sameera Chathuranga